Saturday, October 18, 2014

கட்ராக் (Cataract )..கண்புரை என்றால் என்ன..?!

எமது உடலின் முக்கிய உறுப்புகளில் கண்ணும்.. முக்கிய புலன்களில் பார்வைப்புலனும் அடங்குகிறது. ஆகவே கண்ணையும் கண் பார்வையையும் பாதுகாக்க வேண்டியது தலையாய கடமையாகும்..!

கட்ராக் (கண்புரை) என்றால் என்ன..??! யாருக்கு வரும்..??!

கண்ணின் வில்லைப் பகுதியில் ஏற்படும்.. பாதிப்பே கட்ராக் எனப்படுகிறது. தெளிவான கண்ணாடியால் ஆன வில்லைகள் போன்று இருக்கும் கண்வில்லைகள் வயதாக ஆக.. புகாரடைந்த கண்ணாடியாக மாறிவிடுகின்றன. குளிர்காலங்களில் கார் கண்ணாடிகளில் புகார் படிந்திருப்பது போல. இதனால் பார்வைத் தெளிவின்மை மற்றும் நிறங்களை சரியாக அடையாளம் காண்பதில் பிரச்சனைகள் தோன்றும்.(நிறக்குருடு என்ற பாரம்பரிய நோய் உள்ளவர்களில் நிறங்களை அடையாளம் காண்பதில் இருக்கும் நிலை வேறு. இது வேறு.)
பாரம்பரிய முறையாகவும் இது வரலாம். மற்றும் உடலிரசாயனச் செயற்பாட்டு பிறழ்வுகள் மூலமான தாக்கங்களின் பெறுபேறாகவும் இது வரலாம். சில பெளதீக தாக்கங்களாலும் இந்த நிலை தோன்றலாம்.

சில குழந்தைகள் பிறக்கும் போதே கட்ராகோடு பிறப்பதும் உண்டு.

கட்ராக் ஒரு கண்ணில் அல்லது.. இரண்டு கண்ணிலும் வருமா..??!



கட்ராக் ஒரு கண்ணில் என்றில்லாமல்.. இரண்டு கண்ணிலும் வர வாய்ப்புள்ளது.

கட்ராக் பரிகாரம் என்ன..?!

சத்திரசிகிச்சை.



கட்ராக் வந்தால்.. விழிவெண்படலம் (Cornea) ஊடாக சிறிய துளையிட்டு.. பாதிக்கப்பட்ட வில்லையை அகற்றி அதற்கு மாற்றீடாக பிளாஸ்டிக் வில்லையை வைத்துவிடுவார்கள். இதன் மூலம் மீண்டும் பார்வைத் தெளிவு திரும்ப 90% வாய்ப்புள்ளது.

இந்த சத்திரசிகிச்சைக்கு எவ்வளவு காலம் எடுக்கும்..?!

சராசரியாக..30 தொடங்கி 45 நிமிடங்கள்.

இந்த சத்திரசிகிச்சையின் போது மயக்க மருந்து தருவார்களா..?!

ஆம். கண்ணைச் சுற்றிய பகுதிகளை மட்டுமே அது விறைக்க வைக்கும். இதனை local anaesthetic என்று அழைப்பார்கள்.

கட்ராக் சத்திரசிகிச்சையால் பிரச்சனைகள் வருமா..?!

ஆம். வர வாய்ப்புள்ளது. கட்ராக் சிகிச்சையின் போது விழிவெண்படலத்தில் இடப்படும் சிறிய துவாரம்.. காலப்போக்கில் சரியாகி விட வேண்டும். ஆனால் சிலரில் அது சரியாக ஆறாமல்.. அதுவே ஒரு கறையாக மாறி பார்வைப் புலனில் பாதிப்பை அல்லது இடையூறை கொண்டு வரலாம். இதனை அகற்ற பின் வேறு பல சிகிச்சைகள் (சத்திர சிகிச்சைகள் உட்பட) அளிக்க வேண்டி இருக்கும்.

மேலும் சத்திரசிகிச்சையின் பின் சரியான பராமரிப்பின்றிய கண்களில் ஏற்படும் தொற்றுக்கள் சார்ந்தும் பிரச்சனைகள் வரலாம். ஆனால் இவை எல்லாம் சிறிய சதவீதமே ஆகும்.

மேலும்.. செயற்கை வில்லையைச் சுற்றி காலப்போக்கில் சவ்வுகள் வளரலாம். இதனை posterior capsule opacification (PCO) நிலை என்பார்கள். லேசர் சிகிச்சை மூலம் இதனை சரிசெய்ய முடியும்.

விழிவெண்படலத்தை பாதிக்கும் என்றால் கட்ராக் சத்திரசிகிச்சை செய்யத்தான் வேண்டுமா..?!

தற்போதைய வழிமுறையின் படியான கட்ராக் சத்திரசிகிச்சையின் பின்னான விழிவெண்படல பாதிப்பு என்பது 20% தான் அவதானிக்கப்பட்டுள்ளது. அதிலும் பல மீளத்தக்க பாதிப்புக்களாகவே இருக்கின்றன. அந்த நிலையில்.. மொத்தமான கட்ராக் பார்வைப்புல இழப்பை விட.. இந்தப் பாதிப்பு ஒப்பீட்டளவில் சிறிய சதவீதமே ஆகும். அதனால்.. கட்ராக் சத்திரசிகிச்சை செய்து கொள்வது பற்றி அதிகம் அஞ்ச வேண்டியதில்லை.

கட்ராக் சத்திரசிகிச்சையை இரண்டு கண்ணிலும் ஒரே தடைவையில் செய்யலாமா..??!

பொதுவாக.. இரண்டு கண்ணிலும் ஒரே தடவையில்.. செய்யமாட்டார்கள். ஒன்றன் பின் ஒன்றாக... சத்திரசிகிச்சை செய்யப்பட்ட ஒன்றின் பெறுபேறு முன்னேற்றம் இவற்றைக் கருத்தில் கொண்டே மற்றைய கண்ணில் சத்திரசிகிச்சைக்கு முன்மொழிவார்கள்.

யாரில் இந்த சத்திரசிகிச்சையை செய்ய தயங்குவார்கள்..?!

மேலும் உயர் குருதி அழுத்தம்.. நீரிழிவு.. இதயப் பிரச்சனை மற்றும் ஒவ்வாமைகள் உள்ளவர்களிடத்தில்.

கட்ராக் சத்திரசிகிச்சையின் பின் எவ்வளவு காலம் ஓய்வு வேண்டும்.. என்ன மாதிரியான முற்காப்புகளை செய்ய வேண்டும்..??!

கட்ராக் சத்திரசிகிச்சையின் பின் 2 தொடக்கம் 3 வாரம் ஓய்வு அவசியம். மேலும்.. கண்ணை கைகளால் தொடுவது.. கசக்குவது கூடாது. அதேபோல்.. கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது சோப் முதலானவற்றை பாவித்து கழுவுவது கூடாது. கடும் ஒளியை காணா வண்ணம்.. புகாரடைந்த (கூலிங்) வில்லைகள் அற்ற கண்ணாடியை அணிந்து கொள்ளலாம்.

மேலும் வெற்றுக் கண்ணால் பிரகாசமான ஒளியை.. மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுக்கக் கூடிய தொலைகாட்சி பார்ப்பது.. நூல்கள் படிப்பது.. கணணியில் இருப்பது.. போன்ற செயற்பாடுகளை கண் மருத்துவர் பரிசோதித்து உத்தரவாதம் அளிக்கும் வரை நிறுத்துவது அல்லது குறைப்பது நன்று.

கட்ராக் சத்திரசிகிச்சையின் பின் கண்ணாடி அணியும் நிலை வருமா..??!

ஆம். வரலாம். காரணம் கட்ராக் சத்திரசிகிச்சையின் பின் இயற்கையான கண்வில்லைகள் அகற்றப்பட்டு செயற்கையான வில்லைகள் அங்கு வைக்கப்படுவதால்.. அவற்றால் இயற்கையான வில்லைகளைப் போலவே 100% தம்மை பார்வைத் தூரத்துக்கு ஏற்ப இசைவுபடுத்தி பார்க்க முடியாது. இந்த நிலையில்.. சில பார்வைத் தெளிவின்மைகளைப் போக்க.. அவரவரின் தேவைக்கு ஏற்ப கண்ணாடிகள் கண் மருத்துவப் பரிசோதனைகளை அடுத்து அணிய நேரிடலாம். சிலர் கென்ராக் வில்லைகள் அணிந்து கொள்வார்கள்.

மேலும் விபரங்கள் அறிய..

http://www.nhs.uk/Conditions/Cataract-surgery/Pages/Introduction.aspx

http://www.webmd.com/eye-health/cataracts/health-cataracts-eyes




Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:24 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க